பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து, மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும் சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி, வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய, ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி, விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய, நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும் உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே.
கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு, மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய, கந்தம் கமழ்கொன்றை கமழ் புன்சடை வைத்த, எந்தை கழல் ஏத்த, இடர் வந்து அடையாவே.
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய், மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும் பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே.
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி, வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக் கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே.
மிளிரும் அரவோடு வெள்ளைப்பிறை சூடி, வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த, தளரும், உறு நோய்கள்; சாரும், தவம்தானே.
கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி, மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும் நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே.
சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட, மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா, இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே.
மாசு ஊர் வடிவினார், மண்டை உணல் கொள்வார், கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல; “வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய ஈசா!” என்பார்கட்கு இல்லை, இடர்தானே.
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்- திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர் பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே.