பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த, விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம் கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ, படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர் கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம் மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி, பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல் கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம் நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால், பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப, மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம் கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே, பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர, கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம் சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய, பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர் வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின் பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன் தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர, பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால், தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப, பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார், கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம் தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார் பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம் அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய், ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.