பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கோலக்கா
வ.எண் பாடல்
1

மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

2

பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

3

பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

4

தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!

5

மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.

6

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!

7

நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

8

எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

9

நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

10

பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

11

நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.