பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
முந்தி நின்ற வினைகள் அவை போகச் சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்; அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.
மூவர் ஆய முதல்வர், முறையாலே தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர் ஆவர், என்னும் அடிகள் அவர் போலும் ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே.
பங்கயங்கள் மலரும் பழனத்துச் செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர், கங்கை தங்கு சடையார் அவர் போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே.
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம் திரை உலாவு வயல் சூழ் திருப் புன்கூர், உரையின் நல்ல பெருமான் அவர் போலும் விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே.
பவழ வண்ணப் பரிசு ஆர் திருமேனி திகழும் வண்ணம் உறையும் திருப் புன்கூர் அழகர் என்னும் அடிகள் அவர் போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே.
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல் திருந்த நின்ற வயல், சூழ் திருப் புன்கூர்ப் பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே.
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும் தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர், ஆர நின்ற அடிகள் அவர் போலும் கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.
மலை அதனார் உடைய மதில் மூன்றும் சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த் தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே.
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த் தேட நின்றார், உறையும் திருப் புன்கூர் ஆட வல்ல அடிகள் அவர் போலும் பாடல் ஆடல் பயிலும் பரமரே.
குண்டு முற்றிக் கூறை இன்றியே பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்! வண்டு பாட மலர் ஆர் திருப் புன்கூர்க் கண்டு தொழுமின், கபாலிவேடமே!
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன், சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர் நாட வல்ல ஞானசம்பந்தன், பாடல்பத்தும் பரவி வாழ்மினே!