பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு- பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும் வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன, நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே.
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ, ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே.
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை, நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை, காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை, தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர் போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச, நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை, செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர, சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே.
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும் நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா, தம் கை தலைக்கு ஏற்றி, “ஆள்” என்று அடிநீழல் தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.
காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன் நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை, ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் தீபமனத்தார்கள்; அறியார், தீயவே.
வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை, தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே.
பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர், நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை, நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை, எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன், நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை, வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.