பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே.
இந்திர லோக முழுவதும் பணிகேட் டிணையடி தொழுதெழத் தாம்போய் ஐந்தலை நாக மேகலை யரையா அகந்தொறும் பலிதிரி யடிகள் தந்திரி வீணை கீதமுன் பாடச் சாதிகின் னரங்கலந் தொலிப்ப மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடந் திருவிடை மருதே.
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென் றிங்ஙன் வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல கொழிவற நிறைந்து துனிபடு கலவி மலைமக ளுடனாய்த் தூங்கிருள் நடுநல்யா மத்தென் மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை மருதே
அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங் கடியனே னுள்கலந் தடியேன் பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன் படர்சடை விடமிடற் றடிகள் துணியுமி ழாடை அரையில்ஓர் ஆடை சுடர்உமிழ் தரஅத னருகே மணியுமிழ் நாக மணியுமிழ்ந் திமைப்ப மருவிடந் திருவிடை மருதே.
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற் படிவழி சென்றுசென் றேறிச் சிந்தையுந் தானுங் கலந்ததோர் கருவி தெரியினுந் தெரிவுறா வண்ணம் எந்தையுந் தாயும் யானுமென் றிங்ஙன் எண்ணில்பல் லூழிக ளுடனாய் வந்தணு காது நுணுகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை மருதே.
எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண் டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த் துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந் தூங்கிருள் நடுநல்யா மத்தே அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப அந்திபோன் றொளிர்திரு மேனி வரியர வாட ஆடும்எம் பெருமான் மருவிடந் திருவிடை மருதே.
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந் துருகி அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங் காதனேன் மாதரார் கலவித் தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல்யா மத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடந் திருவிடை மருதே.
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார் மாதவர் காதல்வைத் தென்னை வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின் பென்கோ நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடி மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே
கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே ! வம்பனே னுடைய புலங்கலந் தவனே ! என்றுநின் றுருகிப் புலம்புவார் அவம்புகார் அருவி மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான் மருவிடந் திருவிடை மருதே.
ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர் கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங் கலந்தெனக் கலந்துணர் கருவூர் தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்ப வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன் மருவிடந் திருவிடை மருதே.