பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிளநகர்
வ.எண் பாடல்
1

ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண
ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு
காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை
நண்ணினார்,
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.

2

அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு ஆர்த்தது
ஓர் ஆமை பூண்டு
உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப்
புக்கவர் " துயர் கெடுக!" என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடு செய் விளநகர், அவர் மேயதே.

3

வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின்
வேய்த்
தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல் கடல் நஞ்சு
உண்ட
காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர்,
மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது விளநகர் அதே.

4

கால் விளங்கு எரி கழலினார், கை விளங்கிய வேலினார்,
நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்)
இலார்,
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்,
மேல் விளங்கு வெண்பிறையினார்; மேயது விளநகர் அதே.

5

மன்னினார், மறை, பாடினார்; பாய சீர்ப் பழங்காவிரித்
துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என;
சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன்
சேர்த்தினார்;
மின்னு பொன் புரிநூலினார்; மேயது விள நகர் அதே.

6

தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல் உள தெய்வமும்,
யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்;
மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர்
என்னவும்,
மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது விளநகர் அதே.

7

சொல் தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார்,
கல் தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்,
மல் தரும் திரள் தோளினார், மாசு இல் வெண்பொடிப்
பூசினார்,
வில் தரும் மணிமிடறினார், மேயது விள நகர் அதே.

8

படர் தரும் சடை முடியினார், பைங்கழல் அடி பரவுவார்
அடர் தரும் பிணி கெடுக என அருளுவார், அரவு
அரையினார்,
விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார்,
மிடல் தரும் படைமழுவினார், மேயது விளநகர் அதே.

9

கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார்,
பை இலங்கு அரவு அல்குலான் பாகம் ஆகிய பரமனார்,
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார்,
மெய் இலங்கு வெண் நீற்றினார், மேயது விள நகர் அதே.

10

உள்ளதன் தனைக் காண்பன், கீழ் என்ற மா
மணிவண்ணனும்,
"உள்ளதன் தனைக் காண்பன், மேல்" என்ற மா மலர்
அண்ணலும்,
உள்ளதன் தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும்
சடைமுடியின்மேல்
உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.

11

மென் சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய
நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன்,
சீர்
இன்பு உறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப்
போய்,
துன்பு உறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே