பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநனிபள்ளி
வ.எண் பாடல்
1

காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர்
தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய
சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள,
வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி
போலும்; நமர்கா

2

சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர்
திங்கள் கண்ணி, அயலே
இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை,
இறைவன்(ன்) இடம் கொள் பதிதான்
மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம்
நாறும் நீலம் மலரும்,
நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை
நனிபள்ளி போலும்; நமர்கா

3

பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடு இலாத பெருமான்,
கறுமலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை, இடம் ஆய
காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு
போது அலர்ந்த விரை சூழ்
நறுமலர் அல்லி பல்லி, ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி
போலும்; நமர்கா

4

குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு, இலங்கு
தலைமாலையோடு குலவி,
ஒளிர் தரு திங்கள் சூடி, உமை பாகம் ஆக உடையான்
உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட
பெடைவண்டு தானும் முரல,
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனி
பள்ளிபோலும்; நமர்கா

5

தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு
நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம்
ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர்
தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும்
நனிபள்ளி போலும்; நமர்கா

6

மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து, மலையான்
மடந்தை மணிபொன்
ஆகம் ஓர் பாகம் ஆக, அனல் ஆடும் எந்தை பெருமான்
அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும், சிலம்ப அகில் உந்தி
ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும்,
நனிபள்ளிபோலும்; நகர்கா

7

தகை மலி தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம், கொடு
கொட்டி வீணை முரல,
வகை மலி வன்னி, கொன்றை, மதமத்தம், வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல்,
பணிவார்கள் பாடல், பெருகி,
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி
போலும்; நகர்கா

8

வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா
அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான்
உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற
நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
நனிபள்ளி போலும்; நமர்கா

9

நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை
சீர்மை நினையார்,
அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத
அண்ணல், நகர்தான்
புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை,
புனை கொன்றை, துன்று பொதுள
நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்;
நமர்கா

10

அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க! என்று கையில் இட
உண்டு பட்ட அமணும்,
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர்
குணம் இன்றி நின்ற வடிவும்,
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின்
விடையான் உகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
நனிபள்ளிபோலும்; நமர்கா

11

கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி
என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி
ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்
இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை
கெடுதல் ஆணை நமதே.