பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கோட்டாறு
வ.எண் பாடல்
1

கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
அதிர்கின்ற பூம்பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே

2

நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழை
குன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான் அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே.

3

விரவி நாளும் விழா இடைப் பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய,
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில்,
அரவம் நீள்சடையானை உள்கி நின்று, ஆதரித்து, முன் அன்பு செய்து, அடி
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே.

4

அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகைக்
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்,
"நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே!" என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.

5

பழைய தம் அடியார் துதிசெய, பார் உளோர்களும் விண் உளோர் தொழ,
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில்,
கழலும் வண் சிலம்பும்(ம்) ஒலி செய, கான் இடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார், அணி ஆவர், வானவர்க்கே.

6

பஞ்சின் மெல் அடி மாதர், ஆடவர், பத்தர், சித்தர்கள், பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில்,
மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே! என உள் நெகிழ்ந்தவர்,
துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத் தொல் நிலத்தே.

7

கலவ மா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்,
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா! என உன்னுவார் அவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.

8

வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட, வார் புனல் திரை
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில்
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே! கழலால் அரக்கனை
மிண்டு எலாம் தவிர்த்து, என், உகந்திட்ட வெற்றிமையே?

9

கருதி வந்து அடியார் தொழுது எழ, கண்ணனோடு அயன் தேட, ஆனையின்
குருதி மெய் கலப்ப உரி கொண்டு, கோட்டாற்றில்,
விருதினால் மடமாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி, வெள்
எருது உகந்தவனே! இரங்காய், உனது இன் அரு

10

உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர்,
கொடை இலார் மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை
அடைகிலாத வண்ணம்? அருளாய், உன் அடியவர்க்கே!

11

விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.