பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல் ஆக விழித்தவனே! அழகு ஆர் கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்! உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.
துணைஆக ஒர் தூ வள மாதினையும் இணைஆக உகந்தவனே! இறைவா! கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்! இணை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.
நெடியாய்! குறியாய்! நிமிர்புன்சடையின் முடியாய்! சுடுவெண்பொடி முற்று அணிவாய்! கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்! அடியார்க்கு அடையா, அவலம் அவையே.
எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ, வளி, காயம், என வெளி மன்னிய தூ ஒளியாய்! உனையே தொழுது உன்னுமவர்க்கு அளியாய்! கழிப்பாலை அமர்ந்தவனே!
நடம் நண்ணி, ஒர் நாகம் அசைத்தவனே! விடம் நண்ணிய தூ மிடறா! விகிர்தா! கடல் நண்ணு கழிப்பதி காவலனே! உடல் நண்ணி வணங்குவன், உன் அடியே.
பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்) மறை ஆர்தரு வாய்மையினாய்! உலகில் கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்! இறை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.
முதிரும் சடையின்முடிமேல் விளங்கும் கதிர் வெண்பிறையாய்! கழிப்பாலை உளாய்! எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு அதிரும் வினைஆயின ஆசு அறுமே.
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே! விரி ஆர்தரு வீழ்சடையாய்! இரவில் கரி காடலினாய்! கழிப்பாலை உளாய்! உரிதுஆகி வணங்குவன், உன் அடியே.
நல நாரணன், நான்முகன், நண்ணல் உற, கனல் ஆனவனே! கழிப்பாலை உளாய்! உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு இலதுஆம், வினைதான்; எயில் எயதவனே!