பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமருகல்
வ.எண் பாடல்
1

சடையாய்! எனுமால்; "சரண் நீ!" எனுமால்;
"விடையாய்!" எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

2

சிந்தாய்! எனுமால்; "சிவனே!" எனுமால்;
"முந்தாய்!" எனுமால்; "முதல்வா!" எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?

3

அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

4

ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

5

துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

6

பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே

7

வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?

8

இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?

9

எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

10

அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

11

வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.