பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய ஆதியான் உறை ஆடானை போதினால் புனைந்து, ஏத்துவார் தமை வாதியா வினை மாயுமே.
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று ஆடலான் உறை ஆடானை தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ, வீடும், நுங்கள் வினைகளே
மங்கை கூறினன், மான்மறி உடை அம் கையான், உறை ஆடானை தம் கையால் தொழுது, ஏத்த வல்லார் மங்கு நோய் பிணி மாயுமே.
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை அண்ணலான் உறை ஆடானை வண்ண மா மலர் தூவிக் கைதொழ எண்ணுவார் இடர் ஏகுமே.
கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கை அணி(ம்) மலரால் வணங்கிட, வெய்ய வல்வினை வீடுமே.
வான் இள(ம்) மதி மல்கு வார்சடை ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த ஊனம் உள்ள ஒழியுமே.
துலங்கு வெண்மழு ஏந்தி, சூழ் சடை அலங்கலான், உறை ஆடானை நலம் கொள் மா மலர் தூவி, நாள்தொறும் வலம் கொள்வார் வினை மாயுமே.
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை அந்தம் இல்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழும் சிந்தையார் வினை தேயுமே.
மறைவலாரொடு வானவர் தொழு அறையும் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை ஏத்த, தீவினை பறையும்; நல்வினை பற்றுமே.
மாயனும் மலரானும் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மா மலர் தூவிக் கைதொழ, தீய வல்வினை தீருமே.
வீடினார் மலி வெங்கடத்து நின்று ஆடலான் உறை ஆடானை நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ் பாட, நோய் பிணி பாறுமே.