பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார், ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்; தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார் வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள் கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம் உடையார்; பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம் உடையார்; வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே.
நொடி ஒர் ஆயிரம் உடையார்; நுண்ணியர் ஆம், அவர் நோக்கும்; வடிவும் ஆயிரம் உடையார்; வண்ணமும் ஆயிரம் உடையார்; முடியும் ஆயிரம் உடையார்; மொய்குழலாளையும் உடையார்; வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
பஞ்சி நுண் துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்; குஞ்சி மேகலை உடையார்; கொந்து அணி வேல் வலன் உடையார்; அஞ்சும் வென்றவர்க்கு அணியார்; ஆனையின் ஈர் உரி உடையார்; வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும் உடையார்; விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது உடையார்; அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக உடையார்; வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக்கருவியும் புறவில் கொண்ட பூதமும் உடையார்; கோலமும் பல பல உடையார்; கண்டு கோடலும் அரியார்; காட்சியும் அரியது; ஒர் கரந்தை வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
மான வாழ்க்கை அது உடையார்; மலைந்தவர் மதில் பரிசு அழித்தார்; தான வாழ்க்கை அது உடையார்; தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த, ஞான வாழ்க்கை அது உடையார்; நள் இருள் மகளிர் நின்று ஏத்த, வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே.
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து வேழ்வி செற்றதும் விரும்பி, விருப்பு அவர் பலபல உடையார்; கேழல் வெண்பிறை அன்ன கேழ் மணிமிடறு நின்று இலங்க வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
வென்றி மா மலரோனும், விரிகடல் துயின்றவர் தானும், என்றும் ஏத்துகை உடையார்; இமையவர் துதி செய, விரும்பி, முன்றில் மா மலர் வாசம் முது மதி தவழ் பொழில் தில்லை மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
மண்டை கொண்டு உழல் தேரர், மாசு உடை மேனி வன்சமணர், குண்டர், பேசிய பேச்சுக் கொள்ளன்மின்! திகழ் ஒளி நல்ல துண்ட வெண்பிறை சூடி, சுண்ண வெண்பொடி அணிந்து, எங்கும் வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன், வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார், நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.