பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய படம் மலி அரவு உடையீரே; படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர் அடைவதும், அமருலகு அதுவே.
சிற்றிடை உடன் மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடியீரே; சுற்றிய சடைமுடியீர்! உம தொழு கழல் உற்றவர் உறு பிணி இலரே.
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய துள்ளிய மான் உடையீரே; துள்ளிய மான் உடையீர்! உம தொழு கழல் உள்ளுதல் செய, நலம் உறுமே.
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரம் எரித்தீரே; ஒன்னலர் புரம் எரித்தீர்! உமை உள்குவார் சொல்-நலம் உடையவர், தொண்டே.
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய பெற்றி கொள் பிறை முடியீரே; பெற்றி கொள் பிறை முடியீர்! உமைப் பேணி நஞ்சு அற்றவர் அருவினை இலரே.
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய மங்கையை இடம் உடையீரே; மங்கையை இடம் உடையீர்! உமை வாழ்த்துவார் சங்கை அது இலர்; நலர், தவமே.
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறி கமழ் சடைமுடியீரே; வெறி கமழ் சடைமுடியீர்! உமை விரும்பி மெய்ந்- நெறி உணர்வோர் உயர்ந்தோரே.
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய தசமுகன் உரம் நெரித்தீரே; தசமுகன் உரம் நெரித்தீர்! உமைச் சார்பவர் வசை அறுமது வழிபாடே.
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய இருவரை அசைவு செய்தீரே; இருவரை அசைவு செய்தீர்! உமை ஏத்துவார் அருவினையொடு துயர் இலரே.
செய்த்தலைப் புனல் அணி சிறுகுடி மேவிய புத்தரொடு அமண் புறத்தீரே; புத்தரொடு அமண் புறத்தீர்! உமைப் போற்றுதல் பத்தர்கள் தம் உடைப் பரிசே.
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய மான் அமர் கரம் உடையீரே; மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய ஞானசம்பந்தன தமிழே.