பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட நின்ற எம் இறை; வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய, அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!
படை உடை மழுவினர், பாய் புலித்தோலின் உடை விரி கோவணம் உகந்த கொள்கையர், விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய, சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர் தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர் மேலவர் பரவு வெண்காடு மேவிய, ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும் தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில், வேழம் அது உரித்த, வெண்காடு மேவிய, யாழினது இசை உடை, இறைவர் அல்லரே!
பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர் ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை, வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய, பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும் எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய அண்ணலை அடி தொழ, அல்லல் இல்லையே.
நயந்தவர்க்கு அருள் பல நல்கி, இந்திரன் கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல் வியந்தவர் பரவு வெண்காடு மேவிய, பயம் தரு மழு உடை, பரமர் அல்லரே!
மலை உடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி தலை உடன் நெரித்து, அருள் செய்த சங்கரர்; விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய, அலை உடைப் புனல் வைத்த, அடிகள் அல்லரே!
ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும் ஆய்த் தேடவும், தெரிந்து அவர் தேரகிற்கிலார் வேதம் அது உடைய வெண்காடு மேவிய, ஆடலை அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!
போதியர், பிண்டியர், பொருத்தம் இ(ல்)லிகள் நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் வேதியர் பரவ வெண்காடு மேவிய ஆதியை அடி தொழ, அல்லல் இல்லையே.
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன், செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல், சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர் அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.