பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கருவிலிக் கொட்டிட்டை
வ.எண் பாடல்
1

மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர்,
கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!

2

ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர்,
காலனார் வருதல் முன், கருவிலி,
கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

3

பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர்,
மங்குமா நினையாதே, மலர்கொடு,
கங்கை சேர் சடையான்தன் கருவிலி,
கொங்கு வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

4

வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!-
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்-
காடனார் உறைகின்ற கருவிலி,
கோடு நீள் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

5

உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்!
பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக்
கையினான், உறைகின்ற கருவிலி,
கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!

6

ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர்,
தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி,
காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி,
கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!

7

நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா ஆறு செயப் புரியாது, நீர்,
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி,
கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!

8

பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு
உணர்த்தல் ஆம்; இது கேண்மின்; உருத்திர-
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி,
குணத்தினான் உறை, கொட்டிட்டை சேர்மினே!

9

நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும்
எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ-
கம்பனார் உறைகின்ற கருவிலி,
கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!

10

பார் உளீர்! இது கேண்மின்: பருவரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்,
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி,
கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!