பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்; காணத் தான் இனியான் கடல் நாகைக்கா- ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை, விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை, கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை, கண்டலும், வினை ஆன கழலுமே.
புனையும் மா மலர் கொண்டு, புரிசடை நனையும் மா மலர் சூடிய நம்பனை, கனையும் வார்கடல் நாகைக்காரோணனை, நினையவே, வினை ஆயின நீங்குமே.
கொல்லை மால்விடை ஏறிய கோவினை, எல்லி மாநடம் ஆடும் இறைவனை, கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை, சொல்லவே, வினை ஆனவை சோருமே.
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக் கையனை, கடல் நாகைக்காரோணனை, மை அனுக்கிய கண்டனை, வானவர் ஐயனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை, விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை, கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை, வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை, இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை, கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை, மனம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து, எந்தை! ஈசன்! என்று ஏத்தும் இறைவனை, கந்த வார் பொழில் நாகைக்காரோணனை, சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.
கருவனை, கடல் நாகைக்காரோணனை, இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை, ஒருவனை, உணரார் புரம்மூன்று எய்த செருவனை, தொழத் தீவினை தீருமே.
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன், வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை அடர ஊன்றிய, பாதம் அணைதர, தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.