பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்; கூரிது ஆய அறிவு கைகூடிடும்- சீரியார் பயில் சேறையுள் செந்நெறி நாரிபாகன்தன் நாமம் நவிலவே.
என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!- மின்னுவார் சடை வேத விழுப்பொருள், செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.
பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி, இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்- சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல் மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர், ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்! சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன் துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்; திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?
தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்? ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்? செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
வைத்த மாடும், மடந்தை நல்லார்களும், ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்? சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ? துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே! இலங்கு சேறையில் செந்நெறி மேவிய அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா; திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான் திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.