பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநாகேச்சுரம்
வ.எண் பாடல்
1

தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்
ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை,
அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள்
மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற
தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை,
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

2

உரித்தானை, மத வேழம் தன்னை; மின் ஆர் ஒளி
முடி எம்பெருமானை; உமை ஓர்பாகம்
தரித்தானை; தரியலர் தம் புரம் எய்தானை; தன்
அடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம்
அரித்தானை; ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு
அறம், பொருள், வீடு, இன்பம், ஆறு அங்கம், வேதம்,
தெரித்தானை; திரு நாகேச்சுரத்து உளானை,
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

3

கார் ஆனை உரி போர்த்த கடவுள் தன்னை;
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை; மதிப்பவர் தம் மனத்து உளானை;
மற்று ஒருவர் தன் ஒப்பார், ஒப்பு, இலாத,
ஏரானை; இமையவர் தம் பெருமான் தன்னை;
இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க
சீரானை; திரு நாகேச்சுரத்து உளானை,
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

4

தலையானை, எவ் உலகும் தான் ஆனானை, தன்
உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா
நிலையானை, நேசர்க்கு நேசன் தன்னை, நீள்
வானமுகடு அதனைத் தாங்கி நின்ற
மலையானை, வரி அரவு நாணாக் கோத்து
வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானை, திரு நாகேச்சுரத்து உளானை,
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

5

மெய்யானை, தன் பக்கல் விரும்புவார்க்கு;
விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும்
பொய்யானை; புறங்காட்டில் ஆடலானை; பொன்
பொலிந்த சடையானை; பொடி கொள் பூதிப்
பையானை; பை அரவம் அசைத்தான் தன்னை;
பரந்தானை; பவள மால்வரை போல் மேனிச்
செய்யானை; திரு நாகேச்சுரத்து உளானை;
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

6

துறந்தானை, அறம் புரியாத் துரிசர் தம்மை;
தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த
நிறைந்தானை; நீர், நிலம், தீ, வெளி, காற்று,
ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை;
மறந்தானை, தன் நினையா வஞ்சர் தம்மை; அஞ்சு
எழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும்
சிறந்தானை; திரு நாகேச்சுரத்து உளானை;
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

7

மறையானை, மால் விடை ஒன்று ஊர்தியானை,
மால்கடல் நஞ்சு உண்டானை, வானோர் தங்கள்-
இறையானை, என் பிறவித்துயர் தீர்ப்பானை,
இன்னமுதை, மன்னிய சீர் ஏகம்பத்தில்
உறைவானை, ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம்
என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானை, திரு நாகேச்சுரத்து உளானை,
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

8

எய்தானை, புரம் மூன்றும் இமைக்கும் போதில்;
இரு விசும்பில் வருபுனலைத் திரு ஆர் சென்னிப்
பெய்தானை; பிறப்பு இலியை; அறத்தில் நில்லாப்
பிரமன் தன் சிரம் ஒன்றைக் கரம் ஒன்றி(ன்)னால்
கொய்தானை; கூத்து ஆட வல்லான் தன்னை;
குறி இலாக் கொடியேனை அடியேன் ஆகச்
செய்தானை; திரு நாகேச்சுரத்து உளானை;
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

9

அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை,
வான் பயிரை, அப் பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை, அயன் மாலும் தேடிக் காணாச்
சுடரானை, துரிசு அறத் தொண்டுபட்டார்க்கு
எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை,
இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்,-
தெளியானை, திரு நாகேச்சுரத்து உளானை,
சேராதார் நன் நெறிக் கண் சேராதாரே.

10

சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து போற்றச்
சிறந்தானை; நிறைந்து ஓங்கு செல்வன் தன்னை;
பார்த்தானை, மதனவேள் பொடி ஆய் வீழ;
பனிமதி அம் சடையானை; புனிதன் தன்னை;
ஆர்த்து ஓடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம்
தீர்த்தானை; திரு நாகேச்சுரத்து உளானை;
சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.