பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமறைக்காடு
வ.எண் பாடல்
1

தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய்; தொல்
அமரர் சூளா மணிதான் கண்டாய்;
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு
ஆற்ற எளியான் கண்டாய்;
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்;
மெய்ந் நெறி கண்டாய்; விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்-மறைக்காட்டு
உறையும் மணாளன் தானே.

2

கை கிளரும் வீணை வலவன் கண்டாய்; காபாலி
கண்டாய்; திகழும் சோதி
மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய்; மெய்
அடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்;
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்;
பராபரன் கண்டாய்; பாசூரான் கண்டாய்;
வை கிளரும் கூர்வாள் படையான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

3

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய்;
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்;
நிலம், துக்கம், நீர், வளி, தீ, ஆனான் கண்டாய்;
நிரூபியாய் ரூபியும் ஆய் நின்றான் கண்டாய்;
சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய்;
தாமரையான், செங்கண் மால், தானே கண்டாய்;
மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

4

கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்; காலனையும்
காலால் கடந்தான் கண்டாய்;
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய்; புலி
உரி சேர் ஆடைப் புனிதன் கண்டாய்;
வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்;
வெண் நீற்றான் கண்டாய்; நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்-மறைக்காட்டு
உறையும் மணாளன் தானே.

5

மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்;
முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்;
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்; இன்
அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்;
ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்;
அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்;
வாரி மத களிறே போல்வான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

6

ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்;
அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்;
கோடியான் கண்டாய்; குழகன் கண்டாய்; குளிர்
ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்;
நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்;
நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம்
வாடிய வாட்டம் தவிர்ப்பான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

7

வேலை சேர் நஞ்சம், மிடற்றான் கண்டாய்; விண்
தடவு பூங் கயிலை வெற்பன் கண்டாய்;
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய்;
அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்;
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய்;
பருப்பதத் தான் கண்டாய்; பரவை மேனி
மாலை ஓர்கூறு உடைய மைந்தன்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

8

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்; அம் தேன்
தெளிகண்டாய்; ஆக்கம் செய்திட்டு
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய்; என்
நெஞ்சே! உன்னில் இனியான் கண்டாய்;
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்; வெண்
காடன் கண்டாய்; வினைகள் போக
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்-மறைக்காட்டு
உறையும் மணாளன் தானே.

9

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்;
முத்தமிழும் நால்மறையும் ஆனான் கண்டாய்;
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்;
ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்;
பால விருத்தனும் ஆனான் கண்டாய்; பவளத்
தடவரையே போல்வான் கண்டாய்;
மாலை சேர் கொன்றை மலிந்தான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

10

அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம்,
ஆர் அழல் ஆய் நீண்டு, உகந்த அண்ணல் கண்டாய்;
துயர் இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதி
விரலால் உற வைத்தான் கண்டாய்;
பெயர் அ(அ)வற்குப் பேர் அருள்கள் செய்தான் கண்டாய்;
பேரும், பெரும் படையோடும், ஈந்தான் கண்டாய்;
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.