பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருநள்ளாறு
வ.எண் பாடல்
1

செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை, கரிய கண்டனை, மால் அயன் காணாச்
சம்புவை, தழல் அங்கையினானை, சாமவேதனை, தன் ஒப்பு இலானை,
கும்ப மாகரியின்(ந்) உரியானை, கோவின் மேல் வரும் கோவினை, எங்கள்
நம்பனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

2

விரை செய் மா மலர்க் கொன்றையினானை; வேத கீதனை; மிகச் சிறந்து உருகிப்
பரசுவார் வினைப் பற்று அறுப்பானை; பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை;
குரை கடல், வரை, ஏழ், உலகு உடைய கோனை; ஞானக் கொழுந்தினை; தொல்லை
நரை விடை உடை நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

3

பூவில் வாசத்தை, பொன்னினை, மணியை, புவியை, காற்றினை, புனல், அனல், வெளியை,
சேவின் மேல் வரும் செல்வனை, சிவனை, தேவ தேவனை, தித்திக்கும் தேனை,
காவி அம் கண்ணி பங்கனை, கங்கைச் சடையனை, காமரத்து இசை பாட
நாவில் ஊறும் நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

4

தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை, உருள
நெஞ்சில் ஓர் உதை கொண்ட பிரானை; நினைப்பவர் மனம் நீங்க கில்லானை;
விஞ்சை வானவர், தானவர், கூடிக் கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும்
நஞ்சம் உண்ட நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

5

மங்கை பங்கனை, மாசு இலா மணியை, வான நாடனை, ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்பு அரியானை, ஏழையேற்கு எளி வந்த பிரானை,
அங்கம் நால்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும்
நங்கள் கோனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

6

கற்பகத்தினை, கனக மால் வரையை, காம கோபனை, கண் நுதலானை,
சொல் பதப் பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை, வெண்ணெய் நல்லூரில்
அற்புதப் பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட
நல் பதத்தை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

7

மறவனை, அன்று பன்றிப் பின் சென்ற மாயனை, நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த
அறவனை, அமரர்க்கு அரியானை, அமரர் சேனைக்கு நாயகன் ஆன
குறவர் மங்கை தன் கேள்வனைப் பெற்ற கோனை, நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரி(ய்)யும் நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

8

மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை, மணியினை, பணிவார் வினை கெடுக்கும்
வேதனை, வேத வேள்வியர் வணங்கும் விமலனை, அடியேற்கு எளிவந்த
தூதனை, தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

9

இலங்கை வேந்தன், எழில் திகழ் கயிலை எடுப்ப, ஆங்கு இமவான் மகள் அஞ்ச,
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள்-இருபதும் நெரித்து, இன் இசை கேட்டு,
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை; பிள்ளை மாமதிச் சடை மேல்
நலம் கொள் சோதி நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

10

செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை, நாவலூர்ச் சிங்கடி தந்தை,
“மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது?” என்று வனப் பகை அப்பன், ஊரன், வன்தொண்டன்-
சிறந்த மாலைகள் அஞ்சினோடு அஞ்சும் சிந்தையுள் உருகிச் செப்ப வல்லார்க்கு
இறந்து போக்கு இல்லை, வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள், இனிதே .