பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், “அடியான்; ஆவா!” எனாது ஒழிதல் தகவு ஆமே? முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால், அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி, இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும் கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! .
ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச் செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம் கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .
சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர் அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்; விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்; கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித் தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய் கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின் கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! .
ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்; போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற; காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக, பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .
பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்- உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே! எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும் கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .
படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா! உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்; அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய; கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான், செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான், மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே .
பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி, கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை, தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .