பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கோளிலி
வ.எண் பாடல்
1

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .

2

வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்!
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

3

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே!

4

சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

5

முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே!
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா!
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்!
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

6

குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .

7

எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே!
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

8

அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்!
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்;
குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

9

பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

10

கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .