பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்! “பித்தனே” என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்; முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்; வாவியில் கயல் பாய, குளத்து இடை மடைதோறும் காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்; ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே! காடு நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும் வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்; ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை, அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்; சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே! அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்! கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்! மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே, விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து, என்னை நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்; சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து இடை மால் தீர்ப்பாய்; சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக் கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே, விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே; தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே! கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை, இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்- உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே .