பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கோலக்கா
வ.எண் பாடல்
1

புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை; பூதநாதனை; பாதமே தொழுவார்
பற்று வான்துணை; எனக்கு எளி வந்த பாவநாசனை; மேவ(அ)ரியானை;
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் பொன்ற, வென்றி மால்வரை அரி அம்பா,
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

2

அங்கம் ஆறும் மாமறை ஒரு நான்கும் ஆய நம்பனை, வேய் புரை தோளி
தங்கு மா திரு உரு உடையானை, தழல் மதி(ச்) சடைமேல் புனைந்தானை,
வெங் கண் ஆனையின் ஈர் உரியானை, விண் உளாரொடு மண் உளார் பரசும்,
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக் காவினில் கண்டு கொண்டேனே

3

பாட்டு அகத்து இசை ஆகி நின்றானை, பத்தர் சித்தம் பரிவு இனியானை,
நாட்டு அகத்தேவர் செய்கை உளானை, நட்டம் ஆடியை, நம் பெருமானை,
காட்டு அகத்து உறு புலி உரியானை, கண் ஓர் மூன்று உடை அண்ணலை, அடியேன்
கோட்டகப் புனல் ஆர் செழுங் கழனிக் கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

4

“ஆத்தம்” என்று எனை ஆள் உகந்தானை, அமரர் நாதனை, குமரனைப் பயந்த
வார்த் தயங்கிய முலை மடமானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனை, சிவனை, செழுந்தேனை, தில்லை அம்பலத்துள்-நிறைந்து ஆடும்
கூத்தனை, குரு மா மணி தன்னை, கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

5

அன்று வந்து எனை அகலிடத்தவர் முன், “ஆள் அது ஆக!” என்று ஆவணம் காட்டி,
நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள்-தொத்தினை; முத்திக்கு
ஒன்றினான் தனை; உம்பர் பிரானை; உயரும் வல் அரணம் கெடச் சீறும்
குன்ற வில்லியை மெல்லியல் உடனே கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

6

காற்றுத் தீப் புனல் ஆகி நின்றானை, கடவுளை, கொடு மால் விடையானை,
நீற்றுத் தீ உரு ஆய் நிமிர்ந்தானை, நிரம்பு பல் கலையின் பொருளாலே
போற்றித் தன் கழல் தொழுமவன் உயிரைப் போக்குவான் உயிர் நீக்கிடத் தாளால்
கூற்றைத் தீங்கு செய் குரை கழலானை, கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

7

அன்று அயன் சிரம் அரிந்து, அதில் பலி கொண்டு, அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை;
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை; சுடர் போல் ஒளியானை;
மின்தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை; வாசம் மா முடிமேல்
கொன்றை அம் சடைக் குழகனை; அழகு ஆர் கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

8

நாளும் இன் இசையால்-தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து, அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை; என் மனக் கருத்தை;
ஆளும் பூதங்கள் பாட, நின்று ஆடும் அங்கணன் தனை; எண் கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உள்ளானை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

9

அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை,
பரக்கும் பார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை,
சிரக் கண் வாய் செவி மூக்கு உயர் காயம்-ஆகித் தீவினை தீர்த்த எம்மானை,
குரக்கு இனம் குதி கொண்டு உகள் வயல் சூழ் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

10

கோடரம் பயில் சடை உடைக் கரும்பை, கோலக் காவுள் எம்மானை, மெய்ம் மானப்
பாடர் அம் குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவல் ஆரூரன்-வன்தொண்டன்-
நாடு இரங்கி முன் அறியும் அந் நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர்
காடு அரங்கு என நடம் நவின்றான் பால் கதியும் எய்துவர்; பதி அவர்க்கு அதுவே .