பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்; சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால் வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார்; பெண்ணோடு ஆணும் அல்லர்; ஊரும் அது ஒற்றியூர்; மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்; காரும் கருங்கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு ஆரம் பாம்பு ஆவது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி, கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே, மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு, யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
ஊட்டிக் கொண்டு உண்பது ஓர் ஊண் இலர், ஊர் இடு பிச்சை அல்லால்; பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர்; ஏறி ஓர் பூதம் தம்பால் பாட்(ட்)டிக் கொண்டு உண்பவர்; பாழிதொறும் பல பாம்பு பற்றி ஆட்டிக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
குறவனார் தம்மகள், தம் மகனார் மணவாட்டி; கொல்லை மறவனாராய், அங்கு ஓர் பன்றிப் பின் போவது மாயம் கண்டீர்; இறைவனார், ஆதியார், சோதியராய், அங்கு ஓர் சோர்வு படா அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர்; நற்ற(வ்)வை, என்னைப் பெற்ற; முற்ற(வ்)வை, தம் அ(ன்)னை, தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்; செத்தவர் தம் தலையில் பலி கொள்வதே செல்வம் ஆகில், அத் தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர் உறைவான், தம் பரம் அல்லவர்; சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்; எம் பரம் அல்லவர்; என் நெஞ்சத் துள்ளும் இருப்பது ஆகில், அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்தார்; மந்திரம் ஓதுவர்; மாமறை பாடுவர்; மான்மறியர்; சிந்துரக் கண்ணனும், நான்முகனும்(ம்), உடன் ஆய்த் தனியே அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப் பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப் பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே .