பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம் நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என் வழி யாமே.
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் செழும்சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன் கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும் பத்திமையால் இப்பயன் அறியாரே.