பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / அமுரிதாரணை
வ.எண் பாடல்
1

உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலில் சிறு கிணறு ஏற்றம் இட்டால் ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாது உயிர் நாடலும் ஆமே.

2

தெளிதரும் இந்தச் சிவ நீர் பருகில்
ஒளிதரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை
வளி உறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம் அது ஆமே.

3

நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளி உச்சி அப்பிடின்
மாறும் இதற்கு மறு மயிர் ஆமே.

4

கரை அருகே நின்ற கானல் உவரி
வரை வரை என்பவர் மதி இலா மாந்தர்
நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்கு
நரை திரை மாறும் நமனும் அங்கு இல்லையே.

5

அளக நல் நுதலாய் ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.

6

வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும்
நாரி மருந்து என்றும் நந்தி அருள் செய்தான்
ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம்
சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே.