பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

உருத்திர பசுபதி நாயனார் புராணம்
வ.எண் பாடல்
001

நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும் புனர் நீத்தம்
மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டுக்
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித்
தலத்தின் மேம் படு நலத்தது பெருந்திருத் தலையூர்.

002

வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ
தேன் அளிப்பன நறுமலர் செறி செழும் சோலை
*ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அவ்வூர்
தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும்.

003

அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி
பங்கனார் அடிமைத் திறம் புரி பசு பதியார்.

004

ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடை அராச் சுருதி
நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார்.

005

கரை இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும்
நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய
விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி.

006

தெள்ளு தண் புனல் கழுத்து அலவாய் இடைச் செறிய
உள் உறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத்
தள்ளு வெண் திரைக் கங்கை நீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்.

007

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர்ப் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள்
ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

008

காதல் அன்பர் தம் அருந்தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்று அவர் தாம்
தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.

009

நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகு உற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார் ஆம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.

010

அயில் கொள் முக் குடுமிப் படையார் மருங்கு அருளால்
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி
எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவார் ஆம்
செயல் உடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.