பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

செத்திலாப் பத்து
வ.எண் பாடல்
1

பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும், புது மலர்க் கழல் இணை அடிபிரிந்தும்,
கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்.
ஐயனே! அரசே! அருள் பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச்
செய்ய மேனியனே! செய்வகை அறியேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

2

புற்றும் ஆய், மரம் ஆய்; புனல், காலே, உண்டி, ஆய்; அண்ட வாணரும், பிறரும்,
மற்று யாரும், நின் மலர் அடி காணா மன்ன! என்னை ஓர் வார்த்தையுள் படுத்து,
பற்றினாய்; பதையேன்; மனம் மிக உருகேன்; பரிகிலேன்; பரியா உடல் தன்னைச்
செற்றிலேன்; இன்னும் திரிதருகின்றேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

3

புலையனேனையும், பொருள் என நினைந்து, உன் அருள் புரிந்தனை; புரிதலும்,களித்துத்
தலையினால் நடந்தேன்; விடைப் பாகா! சங்கரா! எண் இல் வானவர்க்கு எல்லாம்
நிலையனே! அலை நீர் விடம் உண்ட நித்தனே! அடையார் புரம் எரித்த
சிலையனே! எனைச் செத்திடப் பணியாய்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

4

அன்பர் ஆகி, மற்று, அரும் தவம் முயல்வார், அயனும், மாலும்; மற்று, அழல் உறுமெழுகு ஆம்
என்பர் ஆய், நினைவார் எனைப் பலர்; நிற்க இங்கு, எனை, எற்றினுக்கு ஆண்டாய்?
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை; மரக் கண்; என் செவி இரும்பினும் வலிது;
தென் பராய்த்துறையாய்! சிவலோகா! திருப்பெருந்துறை மேவிய சிவனே!

5

ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து, அன்பால், ஐயனே என்று, உன் அருள் வழி இருப்பேன்;
நாட்டுத் தேவரும் நாடு அரும் பொருளே! நாதனே! உனைப் பிரிவு உறா அருளைக்
காட்டி, தேவ, நின் கழல் இணை காட்டி, காய மாயத்தைக் கழித்து, அருள்செய்யாய்;
சேட்டைத் தேவர் தம் தேவர் பிரானே! திருப்பெருந்துறை மேவிய சிவனே!

6

அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்;
பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்; போற்றி! போற்றி! என் போர் விடைப் பாகா!
இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க, என் செய்கேன்? இது செய்க என்றுஅருளாய்;
சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

7

மாயனே! மறி கடல் விடம் உண்ட வானவா! மணி கண்டத்து எம் அமுதே!
நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; நமச்சிவாய என்று, உன் அடி பணியாப்
பேயன் ஆகிலும், பெரு நெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ!
சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ? திருப்பெருந்துறை மேவிய சிவனே!

8

போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன், புரந்தர ஆதிகள், நிற்க, மற்றுஎன்னைக்
கோது மாட்டி, நின் குரை கழல் காட்டி, குறிக்கொள்க என்று, நின் தொண்டரில்கூட்டாய்;
யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ?
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

9

ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்;
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய்! கங்கையாய்! அங்கி தங்கிய கையாய்!
மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே, மரக்கணேனையும் வந்திடப் பணியாய்;
சேலும், நீலமும், நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

10

அளித்து வந்து, எனக்கு ஆவ என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில்,
திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!
வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா!
களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே!