பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு, இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச் சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய, அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு, இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண் வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான், அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து, தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள், வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்? ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு, புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி, என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும் அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்; பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம். ஆ! கெடுவேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ், மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பது ஓர் நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும் அறிவு அறியேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு, விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்; தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக் கொள்ளாய்; அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.