பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

வாழாப் பத்து
வ.எண் பாடல்
1

பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள் புரியாயே.

2

வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்
செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே.

3

பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி;
வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.

4

வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எல்லை மூ உலகும் உருவி, அன்று, இருவர் காணும் நாள், ஆதி, ஈறு, இன்மை
வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.

5

பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து,
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.

6

பஞ்சின் மெல் அடியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செஞ்செவே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்த
வஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.

7

பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா
மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.

8

பந்து அணை விரலாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அந்தம் இல் அமுதே! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே! அடியேனை
வந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.

9

பாவ நாசா, உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
மூ உலகு உருவ, இருவர் கீழ் மேலாய், முழங்கு அழலாய், நிமிர்ந்தானே!
மா உரியானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.

10

பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செழு மதி அணிந்தாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
தொழுவனோ பிறரை? துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்;
மழ விடையானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக என்று, அருள்புரியாயே.