பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

அருள் பத்து
வ.எண் பாடல்
1

சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை
பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா
நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

2

நிருத்தனே! நிமலா! நீற்றனே! நெற்றிக் கண்ணனே! விண் உளார் பிரானே!
ஒருத்தனே! உன்னை, ஓலம் இட்டு அலறி, உலகு எலாம் தேடியும், காணேன்;
திருத்தம் ஆம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

3

எங்கள் நாயகனே! என் உயிர்த் தலைவா! ஏல வார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே! தக்க நல் காமன் தனது உடல் தழல் எழ விழித்த
செம் கண் நாயகனே! திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அம் கணா! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

4

கமல நான்முகனும், கார் முகில் நிறத்துக் கண்ணனும், நண்ணுதற்கு அரிய
விமலனே, எமக்கு வெளிப்படாய் என்ன, வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்!
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

5

துடி கொள் நேர் இடையாள், சுரி குழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு,
பொடி கொள் வான் தழலில், புள்ளி போல், இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே!
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவியசீர்
அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

6

துப்பனே, தூயாய்! தூய வெள் நீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே! உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே!
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில், செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அப்பனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

7

மெய்யனே! விகிர்தா! மேருவே வில்லா, மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே! காலால் காலனைக் காய்ந்த, கடும் தழல் பிழம்பு அன்ன மேனிச்
செய்யனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஐயனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

8

முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா! மொட்டு அறா மலர் பறித்து, இறைஞ்சி,
பத்தியாய் நினைந்து, பரவுவார் தமக்குப் பர கதி கொடுத்து, அருள்செய்யும்
சித்தனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

9

மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி, மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே! புனிதா! பொங்கு வாள் அரவம், கங்கை நீர், தங்கு செம் சடையாய்!
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே? என்று, அருளாயே!

10

திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி, ஏசறா, நினைந்திட்டு, என்னுடை எம்பிரான் என்று என்று,
அருந்தவா! நினைந்தே, ஆதரித்து அழைத்தால், அலை கடல் அதனுளே நின்று
பொருந்த, வா; கயிலை புகு நெறி இது காண்; போதராய் என்று அருளாயே!