மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும் ஆகாதே?
வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே?
கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே?
காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே?
பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும் ஆகாதே?
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே?
எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது ஆகாதே?
என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!