பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருச்சதகம் - மெய்யுணர்தல்
வ.எண் பாடல்
1

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி! என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

2

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

3

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, மால் இவன் என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?

4

சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி,
ஆவ! எந்தாய்! என்று, அவிதா இடும் நம்மவர் அவரே,
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!

5

தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு, முட்டாது இறைஞ்சேன்;
அவமே பிறந்த அரு வினையேன், உனக்கு அன்பர் உள் ஆம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு; எம் பரம்பரனே!

6

பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.

7

முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து, முன்நாள்,
செழு மலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்; இப்பால், எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி, கதி இலியாய்,
உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு, உழிதருமே.

8

உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும்,
இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின்,
உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே!

9

பவன், எம்பிரான், பனி மா மதிக் கண்ணி, விண்ணோர் பெருமான்,
சிவன், எம்பிரான், என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்;
அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே
புவன், எம்பிரான்! தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.

10

புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே!
தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை
மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா! அமுதே!
நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.