பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருச்சாழல்
வ.எண் பாடல்
1

பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

2

என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!

3

கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!

4

அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை,
வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ!
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்,
சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!

5

தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம்
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ!
தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு
எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!

6

அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய்,
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ!
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம்
சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!

7

மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ
சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!

8

கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!

9

தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ!
பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர்
விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!

10

தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ!
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள்,
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!

11

நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து,
கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ!
கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர்
தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!

12

கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி;
ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ!
ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும்,
வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!

13

மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!

14

தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

15

கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!

16

நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ!
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும்,
கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!

17

அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா,
எம்பெருமான், ஈசா என்று ஏத்தின, காண்; சாழலோ!

18

சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ்
அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!

19

அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்;
எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ!
எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்,
தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!

20

அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும்
இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்,
திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!