பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநள்ளாறும், திருஆலவாயும்
வ.எண் பாடல்
1

பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி
நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்
சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி
வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

2

திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல்
வைத்து உகந்து,
நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா
முளைக்கும்
அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

3

தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி,
யார்க்கும்
நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்
சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த
ஆறே?

4

பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில்
நாற்றத்தோடு,
நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து
பொங்கி,
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண்
அமர்ந்த ஆறே?

5

செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும்,
அவியும், பாட்டும்,
நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

6

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய
பேழ்வாய்
நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்
சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு
பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

7

கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும்,
செஞ்சடையும்,
நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து,
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

8

இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி,
இசை விரும்பி,
நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச்
சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த
ஆறே?

9

பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை
ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

10

தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய
அத் தவத்தர்
நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது
என்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு
எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த
ஆறே?

11

அன்பு உடையானை, அரனை, "கூடல் ஆலவாய் மேவியது
என்கொல்?" என்று,
நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி,
நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன
இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த
இருப்பர் தாமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநள்ளாறு
வ.எண் பாடல்
1

போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

2

தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்
பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.

3

ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.

4

புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,
பல்க வல்ல தொண்டர் தம் பொற்பாத நிழல் சேர,
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

5

ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

6

திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,
“எங்கள் உச்சி எம் இறைவன்!” என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.

7

வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

8

சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

9

உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,
“அண்ணல் ஆகா வண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா, உள் வினை” என்று எள்க வலித்து, இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

10

மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.

11

தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.