பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர் ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர் கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே.
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும் வேதனை, வெண்குழை தோடு விளங்கிய காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு உடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம் உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய ஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை, விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக் கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக் கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை, கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக் குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச் செற்றானை; சீர் திகழும் திருக்கோழம்பம் பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் படியானை, பண்டங்கவேடம் பயின்றானை, கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே!
புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப் பித்தரும், பேசுவ பேச்சு அல்ல; பீடு உடைக் கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.