பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல் தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்! மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம் பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே, திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்! வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய் களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ் செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்! கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோ அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும் தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்! ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்! மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து வௌவவே, நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே?
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ, நல் திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்! குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய கவள மால்கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே?
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும் சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்! மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத் தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர் சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்! வித்தகப் படை வல்ல அரக்கன் விறல் தலை, பத்து, இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே?
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ் சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்! மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர், செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்! வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை, மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித் தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.