பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநல்லூர்ப்பெருமணம்
வ.எண் பாடல்
1

கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?
சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!

2

தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம்
பரு மணலாக் கொண்டு, பாவை நல்லார்கள்,
வரும் மணம் கூட்டி, மணம் செயும் நல்லூர்ப்-
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே!

3

அன்பு உறு சிந்தையராகி, அடியவர்
நன்பு உறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று,
இன்பு உறும் எந்தை இணை அடி ஏத்துவார்
துன்பு உறுவார் அல்லர்; தொண்டு செய்தாரே.

4

வல்லியந்தோள் உடை ஆர்ப்பது; போர்ப்பது
கொல் இயல் வேழத்து உரி; விரி கோவணம்
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே.

5

ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்-
நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே!

6

சிட்டப்பட்டார்க்கு எளியான், செங்கண் வேட்டுவப்-
பட்டம் கட்டும் சென்னியான், பதி ஆவது
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே!

7

மேகத்த கண்டன், எண்தோளன், வெண் நீற்று உமை
பாகத்தன், பாய் புலித்தோலொடு பந்தித்த
நாகத்தன்-நல்லூர்ப்பெருமணத்தான்; நல்ல
போகத்தன், யோகத்தையே புரிந்தானே.

8

தக்கு இருந்தீர்! அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு
நக்கு இருந்தீர்; இன்று நல்லூர்ப்பெருமணம்
புக்கு இருந்தீர்! எமைப் போக்கு அருளீரே!

9

ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர்; மாமறை-
நாலும் தம் பாட்டு என்பர்; நல்லூர்ப்பெருமணம்-
போலும், தம் கோயில் புரிசடையார்க்கே.

10

ஆதர் அமணொடு, சாக்கியர், தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர்! வம்மின்!
நாதனை, நல்லூர்ப்பெருமணம் மேவிய
வேதன, தாள் தொழ, வீடு எளிது ஆமே.

11

நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்,
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை,
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும், பழி பாவம்; அவலம் இலரே.