பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பல்லவனீச்சுரம் - ஈரடி
வ.எண் பாடல்
1

பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்?

2

பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சரத்து
இட்டம் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

3

பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து உறை
பல்லவனீச்சரத்து
அழகராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

4

பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர், பட்டினத்து உறை
பல்லவனீச்சரத்து
அண்ணலாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

5

பல் இல் ஓட்டினர், பலி கொண்டு உண்பவர், பட்டினத்து
பல்லவனீச்சரத்து
எல்லி ஆட்டு உகந்தார், இவர் தன்மை அறிவார் ஆர்?

6

பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சரத்து
இச்சை ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

7

பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சரத்து
எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

8

பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சரத்து
ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

9

படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து
உறை பல்லவனீச்சரத்து
அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

10

பறை கொள் பாணியர், பிறை கொள் சென்னியர், பட்டினத்து
உறை பல்லவனீச்சரத்து
இறைவராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

11

வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர்
பல்லவனீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.