பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்குருகாவூர் - வெள்ளடை
வ.எண் பாடல்
1

சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து
எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர்
விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே.

2

திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே!

3

அடையலர் தொல்-நகர் மூன்று எரித்து, அன்ன-
நடை மடமங்கை ஒர்பாகம் நயந்து,
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண்பிறைச் சங்கரனீரே!

4

வளம் கிளர் கங்கை மடவரலோடு
களம் பட ஆடுதிர், காடு அரங்கு ஆக;
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர் சடை எம்பெருமானே!

5

சுரிகுழல் நல்ல துடியிடையோடு
பொரி புல்கு காட்டு இடை ஆடுதிர், பொங்க;
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தைபிரானே!

6

காவி அம் கண் மடவாளொடும் காட்டு இடைத்
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே!