பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமீயச்சூர் இளங்கோயில்
வ.எண் பாடல்
1

தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.

2

வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே

3

பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்,
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,-
நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே!

4

நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடை இடை
ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,
ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.

5

வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர்,
செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர்,
எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?

6

பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும்,
பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று;
மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,
இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.

7

படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன்,
சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன்,
விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர்,
இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.

8

ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்,
கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர்,
ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.

9

வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர்,
பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே;
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்,
ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

10

கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற,
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.