பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பாறு அலைத்த படுவெண் தலையினன்; நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய, ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய், இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர் கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்; அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம், குரவம் நாறும் குழல் உமை கூறராய் அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.
வேதகீதர்; விண்ணோர்க்கும் உயர்ந்தவர்; சோதி வெண்பிறை துன்று சடைக்கு அணி நாதர்; நீதியினால் அடியார் தமக்கு ஆதி ஆகி நின்றார்-அன்னியூரரே.
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம் இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்; துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு அன்பர் ஆகி நின்றார்-அன்னியூரரே.
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்; கந்தமாமலர் சூடும் கருத்தினர்; சிந்தை ஆர் சிவனார்; செய்யதீவண்ணர்; அந்தணாளர் கண்டீர்-அன்னியூரரே.
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்- வானை; வானவர்தாங்கள் வணங்கவே, தேனை ஆர் குழலாளை ஓர்பாகமா, ஆனைஈர் உரியார்-அன்னியூரரே.
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார், நெற்றி; மேலைவானவர் வந்து விரும்பிய, சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே, ஆலின்கீழ் அறத்தார்-அன்னியூரரே.
எரி கொள் மேனியர்; என்பு அணிந்து இன்பராய்த் திரியும் மூ எயில் தீ எழச் செற்றவர்; கரிய மாலொடு, நான்முகன், காண்பதற்கு அரியர் ஆகி நின்றார்-அன்னியூரரே.
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்- அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற, பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை, அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.