பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாய்மூர்
வ.எண் பாடல்
1

பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம்
கண்டேன்; மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை
அனல் கண்டேன்; கங்கையாளைக்
கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்;
கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்;
வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர்
அடிகளை நான் கண்ட ஆறே!.

2

பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்;
பதினெண்கணமும் பயிலக் கண்டேன்;
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்; நெற்றி-நுதல்
கண்டேன்; பெற்றம் கண்டேன்;
காலைக் கதிர் செய் மதியம் கண்டேன்; கரந்தை
திருமுடிமேல்-தோன்றக் கண்டேன்;
மாலைச் சடையும் முடியும் கண்டேன்-வாய்மூர்
அடிகளை நான் கண்ட ஆறே!.

3

மண்ணைத் திகழ நடம் அது ஆடும், வரை
சிலம்பு ஆர்க்கின்ற, பாதம் கண்டேன்;
விண்ணில்-திகழும் முடியும் கண்டேன்; வேடம்
பல ஆம் சரிதை கண்டேன்;
நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்; நாலுமறை
அங்கம் ஓதக் கண்டேன்;
வண்ணம் பொலிந்து-இலங்கு கோலம் கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

4

விளைத்த பெரும் பத்தி கூர, நின்று மெய்
அடியார் தம்மை விரும்பக் கண்டேன்;
இளைக்கும் கதம் நாகம் மேனி கண்டேன்;
என் பின்கலம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்;
திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண்
ஆர் மதில் மூன்றும் பொன்ற, அன்று,
வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

5

கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்;
காலில் கழல் கண்டேன்; கரியின் தோல் கொண்டு
ஊன் மறையப் போர்த்த வடிவும் கண்டேன்;
உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்;
நால் மறையானோடு நெடிய மாலும் நண்ணி
வரக் கண்டேன்; திண்ணம் ஆக
மான்மறி தம் கையில் மருவக் கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

6

அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்;
அவ் அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்;
முடி ஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப்
பிறை போய் மறையக் கண்டேன்;
கொடி, ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்;
கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்;
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

7

குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன்;
கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்;
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன்; ஏழ்
இசை யாழ், வீணை, முரலக் கண்டேன்;
தழை ஆர் சடை கண்டேன்; தன்மை கண்டேன்;
தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்;
மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

8

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்;
போற்று இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்;
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன்; பார்
ஆகிப் புனல் ஆகி நிற்கை கண்டேன்;
விருந்து ஆய்ப் பரந்த தொகுதி கண்டேன்;
மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்;
மருந்து ஆய்ப் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.

9

மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்;
வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்;
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன்;
கங்கணமும், அங்கைக் கனலும், கண்டேன்;
ஐயம் பல ஊர் திரியக் கண்டேன்; அன்றவன்
தன் வேள்வி அழித்து உகந்து,
வையம் பரவ இருத்தல் கண்டேன்-வாய்மூர்
அடிகளை நான் கண்ட ஆறே!.

10

கலங்க இருவர்க்கு அழல் ஆய் நீண்ட
காரணமும் கண்டேன்; கரு ஆய் நின்று,
பலங்கள் தரித்து, உகந்த பண்பும் கண்டேன்;
பாடல் ஒலி எலாம் கூடக் கண்டேன்;
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து,
அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்;
வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.