பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஎறும்பியூர்
வ.எண் பாடல்
1

பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்;
எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய-
தன்னையும் தன் திறத்து அறியாப் பொறி இலேனைத்
தன் திறமும் அறிவித்து, நெறியும் காட்டி,
அன்னையையும் அத்தனையும் போல, அன்பு ஆய்
அடைந்தேனைத் தொடர்ந்து, என்னை ஆளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை,
செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

2

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை, பசுபதியை, பாசுபத
வேடத்தானை,
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை, வேதியனை,
விண்ணவனை, மேவி வையம்
அளந்தவனை, நான்முகனை, அல்லல் தீர்க்கும் அருமருந்தை,
ஆம் ஆறு அறிந்து என் உள்ளம்
தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
சென்று அடையப் பெற்றேன், நானே.

3

கருவை; என் தன் மனத்து இருந்த கருத்தை; ஞானக்
கடுஞ்சுடரை; படிந்து கிடந்து அமரர் ஏத்தும்
உருவை; அண்டத்து ஒரு முதலை; ஓத வேலி உலகில்
நிறை தொழில் இறுதி நடு ஆய் நின்ற,
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த,
மயானத்து, மாசிலா மணியை; வாசத்
திரு எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை;
சென்று அடையப் பெற்றேன், நானே.

4

பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த
பரஞ்சுடரை, பரிந்து தன்னைப்
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை, தேனை,
புண்ணியனை, புவனி அது முழுதும் போத
உமிழும் அம் பொன் குன்றத்தை, முத்தின் தூணை, உமையவள்
தம் பெருமானை, இமையோர் ஏத்தும்
திகழ் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
சென்று அடையப் பெற்றேன், நானே.

5

பாரிடங்கள் உடன் பாடப் பயின்று நட்டம் பயில்வானை,
அயில்வாய சூலம் ஏந்தி
நேரிடும் போர் மிக வல்ல நிமலன் தன்னை, நின்மலனை,
அம் மலர் கொண்ட (அ)அயனும் மாலும்
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம்
பரந்தானை, நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
சென்று அடையப் பெற்றேன், நானே.

6

கார் முகில் ஆய்ப் பொழிவானை, பொழிந்த முந்நீர்
கரப்பானை, கடிய நடை விடை ஒன்று ஏறி
ஊர் பலவும் திரிவானை, ஊர் அது ஆக ஒற்றியூர்
உடையனாய் முற்றும் ஆண்டு
பேர் எழுத்து ஒன்று உடையானை, பிரமனோடு
மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
சென்று அடையப் பெற்றேன், நானே.

7

“நீள் நிலமும், அம் தீயும், நீரும், மற்றை நெறி இலங்கும் மிகு
காலும், ஆகாச(ம்)மும்,
வாள் நிலவு தாரகையும், மண்ணும், விண்ணும், மன் உயிரும்,
என் உயிரும், தான் ஆம் செம்பொன்
ஆணி!” என்றும், “அஞ்சன மாமலையே!” என்றும், “அம்
பவளத்திரள்!” என்றும், அறிந்தோர் ஏத்தும்
சேண் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை;
சென்று அடையப் பெற்றேன், நானே.

8

அறம் தெரியா, ஊத்தைவாய், அறிவு இல் சிந்தை ஆரம்பக்
குண்டரோடு, அயர்த்து நாளும்
மறந்தும் அரன் திருவடிகள் நினைய மாட்டா மதி இலியேன்
வாழ்வு எல்லாம் வாளா; மண்மேல்
பிறந்த நாள் நாள் அல்ல, வாளா; ஈசன் பேர் பிதற்றிச் சீர்
அடிமைத் திறத்து உள் அன்பு
செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை,
செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

9

அறிவு இலங்கு மனத்தானை, அறிவார்க்கு அன்றி அறியாதார்
தம் திறத்து ஒன்று அறியாதானை,
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை,
பொரு திரைவாய் நஞ்சம் உண்ட
குறி இலங்கு மிடற்றானை, மடல்-தேன் கொன்றைச்
சடையானை, மடைதோறும் கமலம் மென் பூச்
செறி எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
சென்று அடையப் பெற்றேன், நானே.

10

அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி, அடல்
அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள்
முரிந்து, நெரிந்து, அழிந்து, பாதாளம் உற்று, முன் கை
நரம்பினை எடுத்துக் கீதம் பாட,
இருந்தவனை; ஏழ் உலகும் ஆக்கினானை; எம்மானை;
கைம்மாவின் உரிவை போர்த்த,
திருந்து எறும்பியூர் மலைமேல், மாணிக்கத்தை;
செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.