பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
வ.எண் பாடல்
1

சொல் மலிந்த மறைநான்கு ஆறு அங்கம் ஆகிச்
சொல் பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்;
கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும்; கடல்
நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்;
மல் மலிந்த மணி வரைத்திண் தோளர் போலும்;
மலை அரையன் மடப்பாவை மணாளர் போலும்;
கொன் மலிந்த மூ இலைவேல் குழகர் போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

2

கான் நல் இளங் கலி மறவன் ஆகி, பார்த்தன்
கருத்து அளவு செருத் தொகுதி கண்டார் போலும்;
ஆன் நல் இளங் கடு விடை ஒன்று ஏறி, அண்டத்து
அப்பாலும் பலி திரியும் அழகர் போலும்
தேன் நல் இளந் துவலை மலி தென்றல் முன்றில்
செழும் பொழில் பூம்பாளை விரி தேறல் நாறும்,
கூனல் இளம்பிறை தடவு கொடி கொள், மாடக்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

3

நீறு அலைத்த திரு உருவும், நெற்றிக் கண்ணும்,
நிலா அலைத்த பாம்பினொடு, நிறை நீர்க்கங்கை-
ஆறு அலைத்த சடைமுடியும், அம் பொன்தாளும்,
அடியவர்க்குக் காட்டி அருள் புரிவார் போலும்;
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும்;
ஏழ் உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும்;
கூறு அலைத்த மலை மடந்தை கொழுநர் போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

4

தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும்;
சந்திரனைக் கலை கவர்ந்து தரித்தார் போலும்;
செக்கர் ஒளி, பவள ஒளி, மின்னின் சோதி, செழுஞ்
சுடர்த்தீ, ஞாயிறு, எனச் செய்யர் போலும்
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு
புகை போய் விண் பொழிய, கழனி எல்லாம்
கொக்கு இனிய கனி சிதறித் தேறல் பாயும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

5

காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும்;
காமன் எழில் அழல் விழுங்கக் கண்டார் போலும்;
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும்;
ஆணொடு பெண் அலி அல்லர், ஆனார், போலும்;
நீல உரு, வயிர நிரை, பச்சை, செம்பொன், நெடும்
பளிங்கு, என்று அறிவு அரிய நிறத்தார் போலும்
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நன்நீர்க்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

6

முடி கொண்ட வளர்மதியும், மூன்று ஆய்த் தோன்றும்
முளைஞாயிறு அன்ன மலர்க்கண்கள் மூன்றும்,
அடி கொண்ட சிலம்பு ஒலியும், அருள் ஆர் சோதி
அணி முறுவல் செவ்வாயும், அழகு ஆய்த் தோன்ற;
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு; சுடர்ச்
சோதிக்கடல் செம்பொன் மலை போல், இந் நாள்
குடி கொண்டு என் மனத்து அகத்தே புகுந்தார் போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

7

கார் இலங்கு திரு உருவத்தவற்கும், மற்றைக்
கமலத்தில் காரணற்கும், காட்சி ஒண்ணாச்
சீர் இலங்கு தழல்பிழம்பின் சிவந்தார் போலும்; சிலை
வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும்;
பார், இலங்கு புனல், அனல், கால், பரமாகாசம்,
பருதி, மதி, சுருதியும் ஆய், பரந்தார் போலும்;
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

8

பூச் சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார்;
புறம் பயத்தார்; அறம் புரி பூந்துருத்தி புக்கு,
மாச் சூழ்ந்த பழனத்தார்; நெய்த்தானத்தார்;
மா தவத்து வளர் சோற்றுத்துறையார்; நல்ல
தீச் சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து, திரு
ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அந் நாள்
கோச் சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

9

பொங்கு அரவர்; புலித்தோலர்; புராணர்; மார்பில்
பொறி கிளர் வெண்பூண நூல் புனிதர் போலும்;
சங்கு அரவக் கடல் முகடு தட்டவிட்டு, சதுர
நடம் ஆட்டு உகந்த சைவர் போலும்;
அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்ப, தந்தை-
அந்தணனை அற எறிந்தார்க்கு, அருள் அப்போதே
கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார்
போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

10

ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை
இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே
கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,
குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,
பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க்
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்
கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

11

செறி கொண்ட சிந்தை தனுள் தெளிந்து தேறித்
தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும்;
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக, நிறைந்து
அமரர் கணம் வணங்க நின்றார் போலும்;
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும்;
மதில் இலங்கைக் கோன் மலங்க, வரைக்கீழ் இட்டு,
குறி கொண்ட இன் இசை கேட்டு, உகந்தார் போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.