பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆவடுதுறை
வ.எண் பாடல்
1

மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக்
கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன்,
“இறைவன், எம்பெருமான்” என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன்
அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

2

தெருண்ட வாய் இடை நூல் கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென இயற்ற,
சுருண்ட செஞ்சடையாய்! அது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு, அடியேன்,
புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம், “போற்றி போற்றி!” என்று அன்பொடு புலம்பி,
அருண்டு, என் மேல்வினைக்கு அஞ்சி, வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

3

திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய,
புகழினால் அவன் கண் இடந்து இடலும், புரிந்து, சக்கரம் கொடுத்தல் கண்டு, அடியேன்,
திகழும் நின் திருப்பாதங்கள் பரவி, தேவதேவ! நின் திறம்பல் பிதற்றி,
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

4

வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி, விசைத்து, ஒர் கேழலைத் துரந்து, சென்று, அணைந்து,
போரைத் தான் விசயன் தனக்கு அன்பு ஆய்ப் புரிந்து, வான் படை கொடுத்தல் கண்டு, அடியேன்,
வாரத்தால் உன நாமங்கள் பரவி, வழிபட்டு, உன் திறமே நினைந்து, உருகி,
ஆர்வத்தோடும் வந்து, அடி இணை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

5

ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ, உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு, மற்றவர் பொன்னுலகு ஆளப் புகழினால் அருள் ஈந்தமை அறிந்து,
மிக்க நின் கழலே தொழுது, அரற்றி, வேதியா! ஆதி மூர்த்தி! நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான்! உனை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆவடுதுறை
வ.எண் பாடல்
1

கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

2

மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே!
கண் இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் கருத்து அழிந்து, உனக்கே பொறை ஆனேன்;
தெண் நிலா எறிக்கும் சடையானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
அண்ணலே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

3

ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம் ஆர் தரு சடையாய்!
முப்புரங்களைத் தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே!
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே! திரு ஆவடுதுறையுள்
அப்பனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

4

கொதியினால் வரு காளி தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே!
மதி இலேன்; உடம்பில்(ல்) அடு நோயால் மயங்கினேன்; மணியே! மணவாளா!
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே! திரு ஆவடுதுறையுள்
அதிபனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே

5

வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய்! வழி முதலே!
வெந்த வெண் பொடிப் பூச வல்லானே! வேடனாய் விசயற்கு அருள் புரிந்த
இந்துசேகரனே! இமையோர் சீர் ஈசனே! திரு ஆவடுதுறையுள்
அந்தணா! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

6

குறைவு இலா நிறைவே! குணக்குன்றே! கூத்தனே! குழைக் காது உடையானே!
உறவு இலேன், உனை அன்றி; மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே?
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர்ச் செம்பொனே! திரு ஆவடுதுறையுள்
அறவனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7

வெய்ய மா கரி ஈர் உரியானே! வேங்கை ஆடையினாய்! விதி முதலே!
மெய்யனே! அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட, நீ கொடுத்து அருள்புரி விகிர்தா!
செய்ய மேனியனே! திகழ் ஒளியே! செங்கணா! திரு ஆவடுதுறையுள்
ஐயனே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

8

கோது இலா அமுதே! அருள் பெருகு கோலமே! இமையோர் தொழு கோவே!
பாதி மாது ஒருகூறு உடையானே! பசுபதீ! பரமா! பரமேட்டீ!
தீது இலா மலையே! திரு அருள் சேர் சேவகா! திரு ஆவடுதுறையுள்
ஆதியே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

9

வான நாடனே! வழித் துணை மருந்தே! மாசு இலா மணியே! மறைப்பொருளே!
ஏன மா எயிறு, ஆமையும், எலும்பும், ஈடு தாங்கிய மார்பு உடையானே!
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே! தேவனே! திரு ஆவடுதுறையுள்
ஆனையே! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

10

வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும், வேரி மத்தமும், விரவி முன் முடித்த
இண்டை மா மலர்ச் செஞ்சடையானை; ஈசனை; திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை; சிங்கடி அப்பன்-அணுக்க வன் தொண்டன்-ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும்(ம்) அறுப்பாரே.