பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும் ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும் நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
உறவு இலி; ஊனம் இலி; உணரார் புரம் மூன்று எரியச் செறி வி(ல்)லி; தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய அற இலகும்(ம்) அருளான்; மருள் ஆர் பொழில், வண்டு அறையும், நற விரி கொன்றையினான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்; ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்; நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்- பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக் காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ் நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக் கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து, நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே
மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்) உடனே,- புல்கிய ஆரணன், எம் புனிதன், புரிநூல் விகிர்தன், மெல்கிய வில்-தொழிலான், விருப்பன், பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெருமான், நண்ணும் ஊர் நன்பள்ளி அதே.
அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும், எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்; பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்; செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே.
திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய், நம் கண் பிணி களைவான்; அரு மா மருந்து, ஏழ் பிறப்பும்; மங்கத் திருவிரலால் அடர்த்தான், வல் அரக்கனையும்; நங்கட்கு அருளும் பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
ஏன மருப்பினொடும்(ம்) எழில் ஆமையும் பூண்டு, உகந்து, வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்; ஊனம் இல் காழி தன்னுள்(ள்) உயர் ஞானசம்பந்தற்கு அன்று ஞானம் அருள்புரிந்தான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி, கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில் சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.