பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி, அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்; மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
இழித்து உகந்தீர், முன்னை வேடம்; இமையவர்க்கும் உரைகள் பேணாது, ஒழித்து உகந்தீர்; நீர் முன் கொண்ட உயர் தவத்தை, அமரர் வேண்ட, அழிக்க வந்த காமவேளை, அவனுடைய தாதை காண, விழித்து உகந்த வெற்றி என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
படைகள் ஏந்தி, பாரிட(ம்)மும் பாதம் போற்ற, மாதும் நீரும், உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர்; உண்மை அன்றே! சடைகள் தாழக் கரணம் இட்டு, தன்மை பேசி, இல் பலிக்கு விடை அது ஏறி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்; கண் உளீராய்க் கருத்தில் உம்மைக் கருதுவார்கள் காணும் வண்ணம் மண் உளீராய் மதியம் வைத்தீர்; வான நாடர் மருவி ஏத்த, விண் உளீராய் நிற்பது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு, தொண்டர் ஏவல் செய்ய, நடம் எடுத்து ஒன்று ஆடிப் பாடி, நல்குவீர்; நீர் புல்கும் வண்ணம் வடம் எடுத்த கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார் கடல் வாய் விடம் மிடற்றில் வைத்தது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப் பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும் கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி, வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
காதலாலே கருது தொண்டர் காரணத்தீர் ஆகி நின்றே, பூதம் பாடப் புரிந்து, நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்; நீதி ஆக ஏழில் ஓசை நித்தர் ஆகி, சித்தர் சூழ, வேதம் ஓதித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை மாதர் கங்கை, நாகம், விரவுகின்ற சடை உடையீர்; விருத்தர் ஆனீர்; கருத்தில் உம்மைப் பரவும் என்மேல் பழிகள் போக்கீர்; பாகம் ஆய மங்கை அஞ்சி வெருவ, வேழம் செற்றது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்; பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்? நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்- அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும் தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .